ஐதராபாத்தில் தொடர்ந்து சிகிச்சை: ரஜினி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

சென்னை: ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ெகாரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாத் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று காலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் இன்னும் உயர்நிலையிலேயே இருந்தாலும், நேற்று முன்தினம் இருந்ததை விட தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கான ரத்த அழுத்த சிகிச்சைகள் சரியான விகிதத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.

அவரது ரத்த அழுத்த மாறுபாட்டை கவனத்தில் கொண்டு, முழுமையாக ஓய்வு எடுக்கவும், அவரை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ரஜினிகாந்த்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. அச்சப்படும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும் சில பரிசோதனைகளின் முடிவுகள் வந்துவிடும். இன்று (நேற்று) இரவு அவரது ரத்த அழுத்தத்தை பொறுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து நாளை (இன்று) முடிவு செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மம்மூட்டி, ரஜினி விரைவில் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று நேற்று டிவிட் செய்துள்ளார்.

Related Stories: