உருமாறிய கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் கலெக்டர்களுடன் ஆலோசனை: தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த அறிவுரை

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது. இருப்பினும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பு உடன் இருக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய அதாவது, வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து மீண்டும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, சென்னைக்கு 2391 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பதா அல்லது ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து  தலைமை செயலாளர் கலெக்டர்களுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் புதுவகை கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், பரிசோதனைகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மேலும், மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரன்முறைப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்  நடவடிக்கைகள், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போருக்கான காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஊரக வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: