வையம்பட்டி அருகே ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி: வலைதளங்களில் வைரல்

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சி கரையாம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையிலிருந்து  கட்டக்காம்பட்டி, சீத்தப்பட்டி, புதூர், கரையாம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ரேஷன்  கடையில் வழங்கப்பட்ட அரிசி சமைத்து சாப்பிட முடியாத அளவுக்கு தரமற்று, பல வண்ண கலர்களில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்  சாட்டுகின்றனர். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பருப்பு, கல், மண் மற்றும் குப்பைகளும் அதிகளவில் கலந்து வருவதால் அதனை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முற்றிலும் கூலித்தொழிலாளிகள், விவசாயிகள் இந்த ரேஷன் அரிசியை நம்பியே தங்களது குடும்பத்தை நடத்துகின்றனர். தற்போது ரேஷன் கடையில்  வழங்கப்பட்ட இந்த அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதையறிந்து அவர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். இவ்வாறு வழங்கப்பட்ட  தரமற்ற அரிசியையும், அதனை வாங்கிய விவசாய கூலித் தொழிலாளர்களின் குமுறல்களையும் வீடியோ எடுத்த அப்பகுதி இளைஞர்கள் அதனை  முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியட்டதையடுத்து அந்த வீடியோ வைரலாக பரவியது.

இதனையடுத்து, மாவட்ட வழங்கல் அதிகாரி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கரையாம்பட்டிக்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில்  வழங்கப்படும் அரிசியை பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரித்தனர். இதனையடுத்து அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக  தரமான அரிசி வந்த பின்பு பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: