முதல் முறையாக பக்தர்கள், ரங்கா, ரங்கா பக்தி பரவசம் இல்லை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: பரமபதவாசல் வழியாக நம்பெருமாள் சென்றார்

திருச்சி:  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை  4.45மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டமின்றி கோயில் பட்டர்கள்,  ஊழியர்களுடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்தார்.  108 வைணவதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது இவ் விழாவில் உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து பகல்பத்து விழா உற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3.25 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்னத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார். அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றார். அதற்கு முன்னதாக நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேதவிண்ணப்பங்களை கேட்டருளினார். அதனை தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசலை நம்பெருமாள் கடந்தார்.

எப்போதும் பக்தர்கள் கூட்டத்துடனும், கோஷத்துடனும் நம்பெருமாள் சொர்க்கவாசலை கடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக, கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சொர்க்க வாசல் திறப்பை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே இந்த முறை நம்பெருமாள் பக்தர்கள் கூட்டமின்றி, ‘’ரங்கா, ரங்கா’’ கோஷமின்றி சொர்க்கவாசலை கடந்தார். கோயில் பட்டர்கள், ஊழியர்கள் மட்டும் நம்பெருமாளுடன் சொர்க்க வாசலை கடந்தனர். நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரிணி குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியே ஆலநாடான் திருச்சுற்றில் உள்ள மணல் வழியே அகளங்கள் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணி முதல் எழுந்தருளினார்.

Related Stories: