கோயில்களை நிர்வகிக்க வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட 9 இணை ஆணையர் மண்டலங்களின் எல்லை வரையறை: கமிஷனர் பிரபாகர் உத்தரவு

சென்னை: கோயில்களை நிர்வகிக்க வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட 9 இணை ஆணையர் மண்டலங்களின் எல்லையை வரையறுத்து கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவை நிர்வாக அடிப்படையில் பட்டியல் சேர்ந்த கோயில்கள் என்றும், பட்டியல் சேராத கோயில்கள் எனவும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வருவாய் வரும் கோயில்கள் எல்லாம் பட்டியலில் சேர்ந்த கோயில் என்றும், ₹10 ஆயிரத்துக்கு கீழ் வருவாய் வரும் கோயில்கள் அனைத்தும் பட்டியலில் சேராத கோயில்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. பட்டியலில் சேர்ந்த கோயில்கள் இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழும், பட்டியலில் சேராத கோயில்கள் உதவி ஆணையர் நிர்வாகத்தின் கீழும் வருகின்றன. தற்போது, 11 மண்டலங்களில் செயல்பட்டு வரும் 11 இணை ஆணையர்களின் நிர்வாகத்தின் கீழ் 5 ஆயிரம் கோயில்கள் உள்ளன. எஞ்சிய 35 ஆயிரம் கோயில்கள் அந்தந்த மாவட்ட உதவி ஆணையர்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.

இந்நிலையில், இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் 400 முதல் 500 கோயில்கள் வருகிறது. அவர்களால், இந்த கோயில்களை கண்காணிக்க முடியாத நிலையில், நிர்வாக குளறுபடி, வாடகை நிலுவை வசூலிப்பதில் தாமதம், வருவாயில் முறைகேடு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுவது தொடர் கதையாகி வந்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மேலும், புதிதாக 9 இணை ஆணையர்கள் அலுவலகங்கள் உருவாக்கி கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புதிதாக சென்னை-2, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர்கள் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் வருவாய் மாவட்டங்களில் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டம், திருவண்ணாமலை மண்டலத்தில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள், தூத்துக்குடி மண்டலத்தில் தூத்துக்குடி, தென்காசி, கடலூர் மண்டலத்தில் கடலூர், அரியலூர்,  திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டம் (உசிலம்பட்டி, பேரையூர் வருவாய் வட்டங்கள் மட்டும்) என ஒவ்வொரு  மண்டலங்களில் வருவாய் மாவட்டங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கூடுதலாக 9 இணை ஆணையர் பணியிடங்களை அறநிலையத்துறை ஏற்படுத்தியதால் 300 கோயில்களாக குறையும் என்று அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: