சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிந்து சிபிசிஐடி விசாரணை

சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் நேற்று திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து, அப்போது தென் மண்டல சிபிஐ இணை இயக்குநராக இருந்த அசோக்குமார், டிஐஜி அருணாச்சலம், எஸ்பி ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.  விசாரணையில், மத்திய கனிமம் மற்றும் உலோக வணிக கழகத்தின் அதிகாரிகளின் தயவில் சுரானா நிறுவனம் விதிகளுக்கு முரணாக தங்கத்தை இறக்குமதி ெசய்தது தெரியவந்தது. இதனால், சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏற்றுமதி மேம்பாடு மண்டலத்திடம் சுரானா நிறுவனம் சான்றிதழ் பெற்று சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக சுரானா நிறுவனத்தின் மீது 2013ல் சிபிஐ மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும்போது புதிய வழக்கிற்காக 400.47 கிலோ தங்கத்தை தருமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, வங்கிகள் பறிமுதல் செய்த தங்கத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு தேசிய கம்பெனி லா போர்டில் வழக்கு தொடர்ந்தது. தேசிய கம்பெனி லா போர்டு சென்னையை சேர்ந்த சி.ராமசுப்பிரமணியன் என்பவரை சுரானா நிறுவனத்தின் சொத்துகளுக்கு நிர்வாகியாக அறிவித்தது. தொடர்ந்து, ராமசுப்பிரமணியன் சுரானா நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை திரும்ப தருமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், தங்கத்தை திரும்ப தர சிபிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் சீனிவாசன், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது சுரானா நிறுவனத்தில் உள்ள எடை மிஷினில்தான் எடைபோடப்பட்டது. தனி சாட்சி முன்னிலையில் எடை போடப்பட்டது. ஆனால், தவறுதலாக 400.47 கிலோ என்று பதிவு செய்யப்பட்டது என்றார். இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும் தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். தங்கம் மாயமான காலத்தில் சிபிஐயில் இயக்குநராக இருந்தவர் ரஞ்சித் சின்கா. தென் மண்டல இணை இயக்குநராக (ஐஜி அந்தஸ்தில்) இருந்தவர் அசோக்குமார். டிஐஜியாக இருந்தவர் அருணாச்சலம். எஸ்பியாக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கை கையாண்டவர்கள். இந்நிலையில், ஓய்வு பெற்ற ஏடிஜிபி அருணாச்சலத்துக்கு சம்மன் அனுப்பிய சென்னை மண்டல சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அசோக்குமாரிடம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அசோக்குமாரிடம், தற்போது  நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி டிஜிபி பிரதீப் பிலிப், ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 380 (திருட்டு) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல்கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: