போலி கணக்கு மூலம் 26 கோடி ஜிஎஸ்டி மோசடி: சென்னை தொழிலதிபர் கைது

சென்னை: போலி கணக்கு மூலம் மத்திய அரசுக்கு ரூ.26 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு, போலி நிறுவனங்கள் பெயரில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யும் தொழிலதிபர்கள் மீது ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் இரும்பு கழிவுகள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனம் ஒன்று கடந்த நிதி ஆண்டில் ரூ.150 கோடிக்கு வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால் வருமானத்தை குறைத்து மத்திய அரசுக்கு கணக்கு காட்டப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.இதையடுத்து ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இரும்பு கழிவு விற்பனை நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.26 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இரும்பு கழிவு நிறுவன உரிமையாளரான 58 வயது தொழிலதிபரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.தமிழகத்தில் ஜிஎஸ்டி மோசடி வழக்கில் கைது செய்யப்படும் 5வது தொழிலதிபர் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: