பெண் நீதிபதி வீட்டிற்கு சென்று தகராறு முன்னாள் நீதிபதி கர்ணன் மீண்டும் கைது: குற்றத்திற்கு உடந்தையாக இருந்த 5 பேரும் சிக்கினர்

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பெண் நீதிபதிகள் குறித்து முன்னாள் நீதிபதி கர்ணன் தனது யூ-டியூபில் அவதூறாக பேசியதாக கர்ணன் மற்றும் அவரது உதவியாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் திருவான்மியூரில் வசித்து வரும் முன்னாள் பெண் நீதிபதி ஒருவர் வீட்டிற்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்புடி திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் நீதிபதி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட சிசிடிவி பதிவுகளின் படி முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் அவருடன் வந்த பெருங்களத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த மனேகரன்(எ) மாணிக்கவாசகம்(66), பிரகாஷ்(40), விஜயராகவன்(49), ஏகாம்பரம்(60), சூளைமேடு சவுராஸ்டிரா நகரை சேர்ந்த குப்பன்(60) ஆகியோர் மீது ஐபிசி 143, 147, 447, 294(பி), 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணனை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் பெண் நீதிபதி வீட்டில் தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: