லண்டன் சரக்கு விமானத்தில் வந்த விமானிகள் உள்பட 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை: ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை: பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலையொட்டி லண்டனிலிருந்து இந்தியாவிற்கு பயணிகள் விமான சேவைக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனாலும் கார்கோ விமானங்கள் சிறப்பு அனுமதி பெற்று இயக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.  இதையடுத்து லண்டனிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானமும், சென்னையிலிருந்து காலை 7.30 மணிக்கு லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானமும் கடந்த சில தினங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தன. நேற்று பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம், சிறப்பு அனுமதி பெற்று கார்கோ விமானமாக லண்டனிலிருந்து  அதிகாலை 5.30 மணிக்கு சென்னை வந்தது.  விமானத்தில் விமானிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் என 9 பேர் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் சென்னை விமானநிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்பு அவர்கள் 9 பேரும் சென்னை நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த சரக்குகள் இறக்கப்பட்டு, சென்னையிலிருந்து லண்டன் அனுப்ப வேண்டிய சரக்குகள் விமானத்தில் ஏற்றப்பட்டன. அதன்பின்பு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் சிறப்பு கார்கோ விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தை ஏற்கனவே சென்னைக்கு வந்திருந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் இயக்கி சென்றனர்.

Related Stories: