கிராம, வார்டு சபைக் கூட்டங்களின் வெற்றியை tதமிழகத்தை பாழாக்கியிருக்கும் அதிமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தொடருவோம்: ெதாண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ”கிராம, வார்டு சபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின்  தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அதிமுக ஆட்சியை வீழ்த்தும் வரை  தொடர்ந்திடுவோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள்-வார்டுகளில் நடைபெறும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களின் தொடக்க நாளான (டிசம்பர் 23), பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டம் திருப்பெரும்புதூர் (தெற்கு) ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றேன். கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியெங்கும் மக்களின் சிறப்பான, எழுச்சி மிகு வரவேற்பு. அது தனிப்பட்ட முறையில் எனக்கானது என்று நான் எண்ணவில்லை. தமிழக மக்கள் மிகத் தெளிவான முடிவுடன், ஆட்சி மாற்றத்தை உருவாக்கிடத்  தயாராக இருக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில், அவர்களுடைய  எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய இயக்கம், திமுக தான் என்பதில் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அழகிய வெளிப்பாடுதான் மக்கள் தந்த மனமார்ந்த வரவேற்பு.

குண்ணத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம/வார்டு சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆட்சி மாற்றத்துக்கு திமுகவினரையும் மிஞ்சும் வகையில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கூறினர்.

16 ஆயிரம் ஊராட்சிகளுக்கான கிராம/வார்டு சபைக் கூட்டங்களில் முதல்நாளான டிசம்பர் 23 அன்று மட்டும், 1166 கூட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றுள்ளன. இதில் பங்கேற்றும், இணையம் வழியாகவும், “அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என்ற தீர்மானத்தை ஆதரித்திருப்போரின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம் பேர். ஏறத்தாழ 10ஆயிரம் புதிய உறுப்பினர்கள் முதல் நாளில் திமுகவில் இணையும் ஆர்வத்துடன் அலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல்நாளில் மட்டும் நேரடியாக 30 லட்சத்து 40 ஆயிரம் மக்களும், இணைய வழியாக 1 கோடியே 80 லட்சம் பேரும் கிராம/வார்டு சபைக் கூட்டங்களைக் கவனித்துள்ளனர்.

மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பேரைக் கடந்துள்ளது. நாளை(இன்று) இதே போல திண்டிவனம் தொகுதி மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் வார்டுசபைக் கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். விடியலுக்கான தொடக்கப்புள்ளியாகவும், வீணர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைந்துள்ள இந்த கிராம/வார்டு சபை கூட்டங்களின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மக்கள் தந்த மனமார்ந்த பேராதரவாகும். அந்த ஆதரவு நீடித்திடவும், நிலைத்திடவும் ஜனவரி 10 வரை தொடர்ந்து பயணிக்க வேண்டியது திமுகவினரின் கடமையாகும். 16ஆயிரம் ஊராட்சிகள் - வார்டுகளிலும் கிராம/வார்டுசபைக் கூட்டங்களை முழுமையாக நடத்தி, மக்களின் குறைகளைக் கேட்டிட வேண்டும். கிராம/வார்டு சபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின் தொடக்கத்தை, தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அதிமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம்! முதல் நாள் வெற்றி, முழுமையான வெற்றி; இந்த வெற்றி, தொடர்ந்து எப்போதும் நம்முடையதே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: