புதிய வகை மற்றும் 2ம் அலை கொரோனாவால் அச்சம்: பல நாடுகளில் தீவிர ஊரடங்கு அமல்

புதுடெல்லி: உருமாறி, தீவிரமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனாவால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,   மேலும் பல நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தும் முடிவில் உள்ளன.கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பரவிய கொரோனாவின் தாக்கம் தற்போதும் நீடிக்கும் நிலையில், அடுத்த பேரிடியாக இந்த வைரசின் உருமாற்றத்தினால் புதிய   வகை கொரோனா, இங்கிலாந்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவத் துவங்கியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் 2ம் அலை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில்   தற்போது புதிய வகை கொரோனா புறப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவையை முற்றிலும் ரத்து செய்து விட்டன. தவிர இங்கிலாந்தில் இருந்து கடந்த மாதம் 25ம் தேதிக்கு பின்னர் இந்தியா வந்துள்ள பயணிகளின் பட்டியலை மத்திய சுகாதாரத்   துறை கணக்கெடுத்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று   கண்டறியப்பட்டுள்ளது. அவர் கிண்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவின் 2ம் அலை காரணமாக பல்வேறு நாடுகள் மீண்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. மார்ச் 2021 வரை முழு ஊரடங்கு என ஸ்பெயின் ஒரேடியாக கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மக்களை முடக்கி   விட்டது. இங்கிலாந்தில் முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. வரும் குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடைபெறும் பேரணியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ்   ஜான்சன், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இப்போது அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரான்சில் 2 வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் இத்தாலியும் ஊரடங்கு குறித்து அறிவிக்க உள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவை  பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போதும் கொரேனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு  அறிவிக்கப்படும்  என்று தலைநகரில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

Related Stories: