அமைச்சரின் இல்ல விழாவில் இணைந்து பங்கேற்க மறுப்பு; இபிஎஸ்-ஓபிஎஸ் மீண்டும் மோதல்: பொதுக்குழுவில் வெடிக்குமா?

சென்னை: அமைச்சர் இல்ல நிகழ்ச்சியில் ஓபிஎஸ் வருகைக்காக எடப்பாடி பழனிச்சாமி அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் அவர் ெசன்ற பிறகே ஓபிஎஸ் வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கட்சியை ைகப்பற்றுவதில் மீண்டும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது, வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கை கோர்த்தார்.

இதையடுத்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு ‘ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர்’ எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மறைமுகமாக பூசல் ஏற்பட்டு வந்த போதிலும், அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதற்காக தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் நடந்த விழாவில், அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டார். இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தான் எப்போதும் நிரந்தர முதல்வர் என்றார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்ததால் ஓபிஎஸ் கோபமடைந்தார். கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் கடந்த அக்டோபர் முதல் வாரம் தேனி புறப்பட்டுச், சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தது.

அதாவது அதிமுகவில் ஒருங்கிணப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட போது, கட்சியை வழி நடத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக இருந்த போதும் எந்த அதிகாரமும் இல்லை. எனவே வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட குழு ஓபிஎஸ்சை சந்தித்து பேசி சமாதானம் செய்தது. அப்போது வழிகாட்டுதல் குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த அக்.7ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக சிறப்பு செயற்குழு கூட்டப்பட்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதே போன்று ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இதையடுத்து இபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான மனக்கசப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். இது மட்டுமல்லாது, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜவும் அடிக்கடி முதல்வர் வேட்பாளர் குறித்து புதிர் போட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக துணை முதல்வர் ஓபிஎஸ் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இல்ல பூப்புனித நீராட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு, நெல்லையில் தங்கியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 9.15 மணிக்கு சங்கரன்கோவில் புறப்பட்டுச் சென்றார்.

காலை 10.30 மணிக்கு விழா நடந்த ஏஞ்சல் பள்ளி மைதானத்தை அடைந்தார். அதன் பின்னர் ேமடையை ஓட்டி அமைக்கப்பட்டிருந்த தனி அறையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக ஓபிஎஸ் வருகைக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காத்திருந்தார். ஆனால் 11 மணி அவரை துணை முதல்வர் ஓபிஎஸ் வரவில்லை. இதையடுத்து விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சரின் குழந்தைகளை வாழ்த்திப் பேசி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைவுப் பரிசு வழங்கினார். சுமார் 45 நிமிடம் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதும் அதுவரை துணை முதல்வர் ஓபிஎஸ் வரவில்லை.

இதையடுத்து 11.45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி விழா மேடையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் புறப்பட்டார். அதன் பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சங்கரன்கோவில் விழாவிற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரின் குழந்தைகளை வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் விழாவில் எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியுடன் விழா நிகழ்ச்சியில் தோன்றுவதை ஓபிஎஸ் தவிர்த்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா ரிலீஸ், சட்டசபை தேர்தல் என தமிழக அரசியல் சூடுபிடித்து வரும் நிலையில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான விரிசல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழு கூட்டுவது குறித்து பேசியபோது, பொதுக்குழுவை இப்போது கூட்ட வேண்டாம் என்று ஓபிஎஸ் கடுமையாக எதிர்த்தார். பின்னர், மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து நடத்தி ஜன.9 தேதி பொதுக்குழு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இபிஎஸ் அதிகார பலத்தை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பொதுக்குழுவில் இபிஎஸ், ஓபிஎஸ் உரசல் தொடர்பான பிரச்னை வெடிக்குமா என்ற அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related Stories: