தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்கையில் வசிப்பவர்களும், கேரளாவில் இருந்தும் ஏராளாமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வதுடன், உள்நோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு உள்நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. இதனால் ஒரு பெட்டில் 2 நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். அதுவும் இல்லாதபட்சத்தில் நோயாளியை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை உள்ளது. நேற்று கூட மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு 602வது வார்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நோயாளி ஒருவரை வார்டிற்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப் ஏற்றி சிகிச்சை அளித்தனர். இதை கண்டு அவ்வழியே சென்ற நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘அந்த திட்டம், இந்த திட்டம் எனக்கூறி மாநில அரசு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குகிறது. ஆனால் ஏழை, எளிய மக்களின் உயிர்காக்கும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாதது வேதனையாக உள்ளது. எனவே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: