சம்பள உயர்வு அளிக்காவிட்டால் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க மாட்டோம்: ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போர்க்கொடி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில், தொமுச, ஐஎன்டியுசி, ஐஎம்எஸ், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம், சிஐடியு, எரிவாயு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குழு, ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 31.3.2020 முதல் ஊதிய உயர்வு காலக்கெடு முடிந்து, 9 மாதங்கள் ஆகிறது. கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு கடந்த 31.10.2020 காலத்துடன் முடிந்துள்ளது. ஆனாலும், கூட்டுறவு ரேஷன் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவிக்கவில்லை.

அதேநேரம், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கி உள்ளது. அதுவும், ரேஷன் கடை ஊழியர்களை வைத்தே பொதுமக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், பொங்கல் பரிசு வழங்கும் ஜனவரி 4ம் தேதிக்கு முன்னரே கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பு வராவிட்டால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல், புறக்கணிக்கும் முடிவை ரேஷன் கடை ஊழியர்கள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளிலும் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து பேசி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: