நெய்வேலியில் தீவிர பிரசாரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் உழைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி:  கடலூர் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரையை நெய்வேலியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். தொமுச அலுவலகம் அருகே கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொமுச அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் 10 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

என்எல்சி 2வது அனல் மின்நிலையத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த 21 தொழிலாளர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தியபின், தொழிலாளர்களுடன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து தொமுச முதன்மை சங்கமாக முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த மாதம் நடக்கவுள்ள ரகசிய வாக்கெடுப்பில் கட்சி நிர்வாகிகள்  ஒன்றுபட்டு மீண்டும் தொமுசவை முதன்மை சங்கமாக கொண்டுவர வேண்டும். இதன் வெற்றி 2021 தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைய வேண்டும் என்றார்.

 பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இளைஞர் அணியில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்கள் கடலூர் மாவட்டத்தில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. அடிமை அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற செய்தது போல் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இதில் இளைஞரணியினர் கூடுதல் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி திட்டம், குலக்கல்வித் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள், அரசு வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.  தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு செய்யப்படும். ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளித்து உழைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் கலைஞரே வேட்பாளராக நிற்பதாக கருதி எழுச்சியுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: