ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக பாலியல் புகார்: டுவிட்டரில் #RapeAccusedCM என்ற ஹெஷ்டெக் டிரெண்டிங்.!!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிராக #RapeAccusedCM என்ற ஹெஷ்டெக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில பாஜக மகிளா மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஆர்டி குஜூர் தலைமையிலான குழுவினர் அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்முவிடம் பரபரப்பு புகாரை அளித்தனர். அதில், ‘மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒரு மாடல் பெண்ணிடம் தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் பாலியல் அத்துமீறல்களை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தாங்கள்  தலையிட்டு முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் ஆர்டி குஜூர் கூறுகையில், ‘மாநில முதல்வர் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு மும்பையை சேர்ந்த மாடல் பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர் புகாரை வாபஸ் பெற கட்டாயப்படுத்தியதால், இந்த விவகாரத்தின் உண்மை வெளியே வரவில்லை. அதற்காக அவர் தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கலாம்.  தற்போது அந்த பெண்ணின் சார்பில் நாங்கள் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரம் இரண்டு மாநிலங்களுக்கிடையில் இருப்பதால், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி விலக  வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இணையவாசிகள் டுவிட்டரில் #RapeAccusedCM என்ற ஹெஷ்டெக் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, இந்த #RapeAccusedCM என்ற ஹெஷ்டெக் இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Related Stories: