தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: திமுகவினரின் கவனம் வெற்றி நோக்கியே இருக்கவேண்டும்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை எளிதாகப் பெறுவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். வாக்குகளைச் சிதைப்பதற்குப் பணபலம்-அதிகாரபலம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதனை நேரடியாக எதிர்கொள்வதற்கு நம்மிடம் பலமான ஆயுதம் இருக்கிறது; அந்த ஆயுதத்தின் பெயர், திராவிடம்.ஜனநாயகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு. எனினும் வெற்றி மட்டும் திமுகவிற்குத்தான் கிட்டும்.

அந்த வெற்றிக்கு அடிப்படையானவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். எத்தனை கட்சிகள் களம் கண்டாலும், நம் கவனம் முழுவதையும் வெற்றியை நோக்கியே குவித்திட வேண்டும். எதிரிகளை வீழ்த்திட உறுதி பூண்டிட வேண்டும். தற்போது தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்களாகும். நிர்வாக வசதிக்காக மேலும் மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றி பெற்ற பிறகு நடைபெறும்.

கிராமம் / வார்டுகள் வாரியாக வீடு வீடாகச் செல்லுதல்; குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். கைகளில் திமுகவின் இருவண்ணக் கொடியை ஏந்தி, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’என்ற பதாகைகள் தாங்கி, திமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள், பத்தாண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆட்சி மீதான குற்றப் பத்திரிகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கிட வேண்டும்.  

பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.  குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும். நானும் கிராம சபை/வார்டு கூட்டங்களில் பங்கேற்கிறேன். களத்தில் ஒருங்கிணைவோம்; திமுகவின் வெற்றிக்கு, கண்ணுங் கருத்துமாய், கட்டுப்பாடாய் உழைத்திடுவோம். மக்கள் நம் பக்கம்; ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகள் இலட்சியம்; அதை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம்.

Related Stories: