உருமாற்றம் பெற்று வேகமாக பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை தேவை: அரசு, மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வீட்டை தகரம் வைத்து அடைத்துவிட்டனர் என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக அரசு, மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்போது எந்த வீட்டின் முன்போ, தெருவிலோ தகரம் அடிப்பதில்லை. கொரோனா பாதித்த வீடுகளின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அந்த நடைமுறையும் கைவிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அறிக்கையை ஏற்று, அரசுக்கும் முன்கள பணியாளர்களுக்கும், இந்த பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்த மனுதாரருக்கும்  பாராட்டு தெரிவித்தனர்.இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, தற்போது கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று பரவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த புதிய தொற்று காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசமான விளைவுகளை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மிக தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Related Stories: