தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜன.18 முதல் 100% இயங்கும்!: ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் முழுமையான நேரடி விசாரணைகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தடை உத்தரவு தளர்த்தப்பட்டு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சாஹி தலைமையிலான நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்கள் அடுத்த மாதம் 18 முதல் 100 சதவீதம் இயங்கும் என்று கூட்டத்திற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தெரிவித்தார்.

முழுமையான நேரடி விசாரணை நடைபெறும் என்றும் வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் விசாரணை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முழுமையாக கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை டிசம்பர் 23ம் தேதிக்குள் தெரிவிக்கும்படியம் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18ம் தேதி முதல் முழுமையாக இயங்கும் என ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related Stories: