தேர்தல் முன்னேற்பாடுகள்!: தலைமை செயலாளர் சண்முகம், பல்துறை செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை..!!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் இந்த உயர்மட்ட குழு ஆலோசனையானது நடந்து வருகிறது. நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முன்னதாக 9:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது தலைமை செயலாளர் மற்றும் பல்துறை செயலாளர்களுடன் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், பணப்பட்டுவாடா தடுக்கப்பட வேண்டும். ஒரேகட்டமாக தேர்தலை நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட சோதனை எவ்வாறு உள்ளது போன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் உயர்மட்ட குழு ஆலோசனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது  தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்துறை செயலாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக்கு பின்பாக தேர்தல் ஆணையம் அடுத்தகட்டமாக மேற்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் குறித்த விரிவான செய்தியாளர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: