ஆமை வேகத்தில் நடக்கும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் பாலம் கட்டுமானப்பணி

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளது புல்லாவெளி நீர்வீழ்ச்சி. பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்யும் போது இந்த நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருகிறது. பசுமையான சூழலில், சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல சரியான பாதை வசதியோ, வாகனங்கள் நிறுத்தும் இடமோ, குளிக்கும் வசதியோ கிடையாது.மேலும் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல பாதை வசதி அமைத்து தர வேண்டி இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்பேரில் கடந்த 2018ல், நபார்டு கிராமபுற உட்கட்டமைப்பு திட்டத்தின் இப்பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை வசதியுடன் பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் இதுவரை பணிகள் முடிவடையவில்லை. குறைவான பணியாளர்களை கொண்டு வேலை நடப்பதால், மந்த கதியில் வேலை நடந்து வருகிறது.இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்த பகுதியை சேர்ந்த மலைத்தோட்ட விவசாயிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைத் தோட்ட விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: