ஜெருசலேம் புனித பயணத்துக்கு ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக நிதி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் பென்ஜமின், எம்எல்ஏ இன்பதுரை, முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி.பிரபாகர்,  அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன், சிறுபான்மையினர் நல பொருளாளர் ஜான் மகேந்திரன் மற்றும் பேராயர், ஆயர், போதகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாம் எந்த மதத்தைச் தேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள். ஒரு தாய் மக்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம். வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத அளவிற்கு அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ரூ.20,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இனி வருங்காலங்களில் ஜெருசலேம் புனித பயணம் மேற்ெகாள்பவர்களுக்கு ரூ.37 ஆயிரமாக நிதி உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டில் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமையாக உள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட ஒரு கோடியிலிருந்து ரூ.5 கோடி வரை செலவிட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசு தான் அதிமுக அரசு. கூட்டணி வேறு. கொள்கை வேறு. அதிமுக கொள்கையின் அடிப்படையில் தான் செயல்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: