தாளவாடி மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறந்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அருள்வாடி  கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் யானைகள் இரவு நேரத்தில் விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. நேற்று காலை அருள்வாடி பகுதியில் உள்ள விவசாயி புட்டுராஜ் (57) என்பவரது நிலத்தில் காட்டு யானை  இறந்து கிடந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனச்சரகர் முத்து தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சென்று பார்த்தபோது அதே பகுதியில் உள்ள விவசாயி காளய்யா (70) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் தடுக்க மின்வேலி அமைத்து அதில் சட்ட விரோதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும் மின்வேலியில் சிக்கி சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். மின்வேலியில் சட்ட விரோதமாக மின்சாரம் பாய்ச்சிய விவசாயி காளய்யா தலைமறைவானதை தொடர்ந்து வனத்துறையினர் தேடி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: