மதுரை: இந்தியாவில் எத்தனை முறை பணமதிப்பு குறைக்கப்பட்டது என்பது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எஸ்ஐ பணிக்கான எழுத்துத்தேர்வு ஜன.12ல் நடந்தது. இறுதி கீ ஆன்சரில் வினா எண் 47க்கான விடை மாறியிருந்தது. இதனால் எனது வாய்ப்பு பறிபோனது. வினா எண் 47ல், கடந்த 1947க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என இருந்தது. இதற்கு 3 முறை என்பதே சரி. ஆனால், பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டதால், அதை சரியான விடை என தவறாக கருதி மதிப்பெண் வழங்கியுள்ளனர். கடந்த 2016ல் நடந்த பண மதிப்பிழப்பை தவறுதலாக மதிப்பு குறைப்பு என கருதி 4 முறை என தவறான விடைக்கு மதிப்பெண் அளித்துள்ளனர். சரியான விடை அளித்த என்னை, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, 4 முறை தான் சரியான விடை என்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான நிபுணர்களின் தவறான கருத்து. இதனால் மனுதாரர்களுக்கு 0.5 மதிப்பெண் வழங்க வேண்டும். இருவரையும் அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மதிப்பெண் குறைக்கப்பட்ட 8 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். அதில், தனி நீதிபதி உத்தரவால் எங்களுக்கு 0.5 மதிப்பெண் குறைந்துள்ளது. தேர்வான எங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படியான கீ ஆன்சரே சரியானது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இறுதி கீ ஆன்சர் அடிப்படையில் எங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
