குரோம்பேட்டை - மேடவாக்கம் இடையே மினி பஸ் சேவை நிறுத்தம்: மாணவர்கள் அவதி

தாம்பரம்: குரோம்பேட்டையில் இருந்து எம்.ஐ.டி, அஸ்தினாபுரம், திருமலை நகர் வழியாக மேடவாக்கம் வரை (தடம் எண் எஸ்-2) மினி பஸ் இயங்கி வந்தது. தினமும் 3 மினி பஸ்கள் காலை 5 மணி முதல் இரவு 10:30 மணி வரை இயக்கப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் இதை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த மினி பஸ்களின் சேவை, தளர்வுக்கு பிறகும் இதுவரை மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் செம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் ஏராளமான மாணவர்கள் மினி பஸ் சேவை இல்லாததால், அதிக பணம் கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டதை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

 இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் மினி பஸ் சேவை தொடங்கப்படாமல் உள்ளது. எனவே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி மீண்டும் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் மினி பஸ்கள் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: