ராயபுரம் மண்டல அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ்: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டல அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சுகாதார அதிகாரிகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு மீஞ்சூர், பொன்னேரி, செங்குன்றம், திருவொற்றியூர், கொடுங்கையூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வருகின்றனர். இந்த மருத்துவமயைில் தினசரி 50க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள 5வது மண்டல அலுவலக சுகாதார பிரிவில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்கு, பிறப்பு சான்றிதழ் பெற பதிவு செய்தால், அதிகாரிகள் நீண்ட நாட்களுக்கு அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனையுடன்  கூறுகின்றனர்.

ஆனால், புரோக்கர்கள் மூலம் பதிவு செய்தால் 2 நாட்களில் சான்றிதழ் கிடைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சான்றிதழ் பெற நேரடியாக பதிவு செய்யும் பொதுமக்கள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சுகாதார பிரவு அதிகாரிகள் சான்று வழங்கிகின்றனர். பதிவு செய்த குழந்தையின் பெயர், தாய், தந்தை பெயரில் திருத்தம் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்று கூறுகின்றனர். இதேபோல், இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கூட அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே, 5வது மண்டல அலுவலகத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பிறப்பு, இறப்பு சான்றுக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: