மணமேல்குடி அருகே நெல்வேலி கிராமத்தில் சூரை நோய் தாக்கி பயிர் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

அறந்தாங்கி: மணமேல்குடி அருகே நெல்வேலி கிராமத்தில் நெற்பயிரில் சூரைநோய் தாக்கியதில் பயிர்கள் சேதமடைந்ததால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த நெல்வேலி கிராமத்தில் பல நூறுஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்துள்ளனர். மானாவாரி பாசன பகுதியான இங்கு தாமதமாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். நேரடி நெல்விதைப்பு செய்து கதிர்விடும் தருவாயில் நெற்பயிரில் சூரை நோய் தாக்கி உள்ளது. சூரை நோய் தாக்கியதால், பயிர்கள் கருதி, சருகாக மாறியுள்ளன.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும், கூரை நோய் கட்டுக்குள் வராததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியது: நெல்வேலியில் பல நூறு ஏக்கரில் நெல்சாகுபடி செய்துள்ளோம். இந்த ஆண்டு நாங்கள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் கதிர்விடும் தருவாயில் பயிரில் சூரை நோய் தாக்கியதில் பயிர்கள் சருகுபோல மாறிவிட்டன. சூரை நோய் தாக்குதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.எனவே தமிழக அரசு நெல்வேலி கிராமத்தில் சூரை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Related Stories: