அடிப்படை வசதிகள் செய்யாததால் ஆத்திரம்: அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை

காஞ்சிபுரம்: மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சரை, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி இல்லை என கூறி, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.  பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில்  காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் திறந்து வைத்தார். தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில், 449 பேருக்கு ₹1.37 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது. தமிழகத்தில் தரமான சுகாதார சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.  தற்போது தமிழக அரசின் புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற ஒரு செவிலியர் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு உதவியாளருடன் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு, முதல் கட்டமாக 630 மினி கிளினிக்களை கடந்த 14ம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 மினி கிளினிக்களுக்கு அனுமதி வழங்கி, முதல்கட்டமாக 7 மினி கிளினிக்களில் இன்று 3 கிளினிக்கள் துவங்கப்பட்டன. மீதம் உள்ள 4 கிளினிக்கள் இந்த வாரத்தில் துவக்கி வைக்கப்படும்.

அரசு உத்தரவின்படி நகர்புறங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 8 மணி வரையும், கிராமங்களில் காலை 8 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரையும் செயல்படும், மேலும் சனிக்கிழமைகளில் விடுமுறை நாட்களாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி பணி நேரங்களிலும் மினிகிளினிக்கள் இயங்கும். காஞ்சிபுரம் மாவட்ட மினி கிளினிக்கள் இயங்க 7 மருத்துவ அலுவலர்கள், 7 செவிலியர்கள், 7 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சளி, காய்ச்சல், தலைவலி ஆகியவைக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு வாரந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.

செவ்வாய் கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். புதன்கிழமைகளில் குழந்தைகளுக்கு தவணை முறையில் தடுப்பூசி அளிக்கப்படும் என்றார். எம்எல்ஏ பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) நாராயணன், காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா இளங்கோ, துணை இயக்குநர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திடீரென மறித்து வாக்குவாதம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் செரப்பணஞ்சேரி ஊராட்சி நாவலூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் 2048 குடியிருப்பு கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.  சென்னையில் உள்ள வரதராஜபுரம், ஆதனூர், மண்ணிவாக்கம், அரும்பாக்கம், கூடுவாஞ்சேரி, எம்ஜிஆர் காலனி, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் ஆற்று வரவுக்கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து இருந்த சுமார் 2000 குடும்பங்களை, அங்கிருந்து அகற்றி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வருவாய் துறையினர் குடியமர்த்தினர். ஆனால், இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், மருத்துவம், பஸ், சுடுகாடு, இடுகாடு உள்பட எவ்வித வசதிகளும் இல்லை என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் பென்ஜமினை, குடிசைமாற்று வாரிய மக்கள்  முற்றுகையிட்டு, தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் இதுவரை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி மக்களுக்கு குடியிருப்பு பத்திரம் வழங்கவில்லை என்று சரமாரியாக குற்றஞ்சாட்டினர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைய செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: