திருத்தணி ,கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களுக்கு நேர்காணல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலவாக்கம்,  குருவராஜகண்டிகை, சூரப்பூண்டி, பல்லவாடா, கண்ணம்பாக்கம் ஆகிய 5 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.  பாலவாக்கத்தில் ஊராட்சி தலைவர் பி.வி.குமரவேல் தலைமையிலும், நேர்காணல் மேற்பார்வையாளர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பார்த்தசாரதி மேற்பார்வையிலும் நடைபெற்ற நேர்காணலில் விண்ணப்பித்த 52 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.   குருவராஜகண்டிகையில் ஊராட்சி தலைவர் ரவி தலைமையிலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் மேற்பார்வையிலும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட இருவரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடந்தது.

சூரப்பூண்டியில் ஊராட்சி தலைவர் வாணி பாலசுப்பிரமணியம் தலைமையிலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் (பொ) மூர்த்தி மேற்பார்வையிலும் நடைபெற்ற நேர்காணலில் 32 பேர் பங்கேற்றனர்.

பல்லவாடா ஊராட்சியில் அதன் தலைவர் லட்சுமி பன்னீர்செல்வம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ருத்ரமூர்த்தி, குணசேகரன், மகாதேவன் மேற் பார்வையிலும்  நேர்காணல் நடைபெற்றது. இதில் 168 பேர் பங்கேற்றனர். கண்ணம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சதீஷ் தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மேற்பார்வையிலும் நடைபெற்ற நேர்காணலில் 29 பேர் பங்கேற்றனர். இந்த 5 ஊராட்சிகளில் நடைபெற்ற நேர்காணலை திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் (தணிக்கை) சுதா, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்தணி; திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய தாழவேடு ஊராட்சியில் காலியாக உள்ள பதவிக்கு நேர்காணல் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் நீண்டநேரம் காத்திருந்து நேர்காணலில் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படை இருப்பினும் கூட இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் கூட இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  உதவி திட்ட அலுவலர் எல். சத்திய சங்கரி தலைமையில் திருவாலங்காடு வட்டார  வளர்ச்சி அலுவலர் பா.அருள், ஊராட்சி மன்ற தலைவர் ஜி. நிர்மலா கோபி ஆகியோர் முன்னிலையில்  நேர்காணல் நடைபெற்றது.

Related Stories: