1.28 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மடிப்பாக்கம் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கிராம குளத்தில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில் கிராம குளம் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம், கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.28  கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, நடைபாதை, இருக்கைகள். மின்விளக்கு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. சமீபத்தில் பெய்த மழையால் இந்த குளத்தில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், மழை பெய்தபோது, குளக்கரை சுற்றியுள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி ஊழியர்கள் சிறு கால்வாய் வெட்டி அதை குளத்தில்  கலக்கும்படி செய்தனர்.

தற்போது, அருகில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த தற்காலிக  சிறு கால்வாய் வழியாக குளத்து நீரில் கலக்கிறது.  இதனால், குளத்து நீர் துர்நாற்றம் வீசி வருவதுடன், நடைபயிற்சி  மேற்கொள்பவர்களுக்கும், இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுப்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.   அதுமட்டுமின்றி, நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட  நடைபாதை பகுதி மற்றும் இருக்கைகளை சுற்றிலும் மது பாட்டில்கள் உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதே இல்லை.  இதனால், இவை குளத்தில் விழுந்து நீர் மாசடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: