கல்லூரியில் இருந்து விலகிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தர வேண்டும்: யுஜிசி உத்தரவு

சென்னை: கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு பிறகு விலகிய மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திருப்பித் தர யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து யுஜிசி பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா தாக்கத்தால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. ஊரடங்கால் பெற்றோர்களும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள், நீதிமன்ற உத்தரவுகள்,  மக்கள் நல அமைப்புகளிடம்  இருந்து பல்வேறு கடிதங்கள் என  யுஜிசிக்கு வந்தது.

அதன் அடிப்படையில், 2020-21 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்த பின் பல்வேறு காரணங்களால் விலகியிருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத்தொகையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் திருப்பித்தர வேண்டும்.  குறிப்பாக தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும்  நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் செலுத்திய  தொகையை திருப்பித்தரவில்லை என புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி மற்றும்  நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: