கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, கமல்ஹாசன் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி அதிமுக வாக்குகளை கமல்ஹாசன் கலைக்க பார்ப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி கமல், அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று  ராயபுரத்தில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டி : எம்.ஜி.ஆரை அதிமுகவினர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். கமல் போட்ட ட்வீட் அவருகேதான் பொருந்தும்; அவர் தான் எம்.ஜி.ஆரின் தொண்டர்களின் காலையும், அதிமுகவினர் காலை பிடித்து வருகிறார் - ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் ஊரார் கால் பிடிப்பார். சந்தர்ப்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளது. அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதால், கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் எனக் கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியால் பல குடும்பங்கள் சீரழிவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில் பிக்பாஸை முதல்வர் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் தெரிவித்திருந்தார். மேலும், லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: