டாஸ்மாக் கடைகளில் நடந்த சோதனையில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் மண்டல அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் மாமூல்: பறிமுதலான ஆவணங்களை பார்த்து போலீசார் அதிர்ச்சி; ஆண்டுக்கு பல கோடிகளை குவித்தது அம்பலம்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட எலைட் மதுபான கடைகள் உள்ளது. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக்கில் கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை வாங்கப்படுகிறது. அதேபோல் எலைட் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.20 முதல் ரூ.40 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இதில், எலைட் மதுபான கடைகளில் தான் அதிகமாக முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் அளித்த தொடர் புகாரை தொடர்ந்து, டிஎஸ்பி லவகுமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 15ம் தேதி சென்னை அமைந்தகரை, அயனாவரம், வேளச்சேரி பீனிக்ஸ் மால், அல்சா மால் ஆகிய 5 இடங்களில் உள்ள எலைட் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக தென் சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் அலுவலகம், அமைந்தகரையில் உள்ள வீடு, முருகன் மனைவியும் வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வசித்து வந்த வீட்டிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது.

எலைட் கடைகள் மற்றும் தென் சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் அலுவலகம் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. ஏன் என்றால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்களை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பார்த்து, வியப்பில் ஆழ்ந்தனர். அதில் பல ரகசிய தகவல்கள் மற்றும் பணப்பட்டுவாடா தகவல்கள் உள்ளது. குறிப்பாக, எலைட் கடைகள் மற்றும் அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக பல லட்சம் ரூபாய் ரொக்கம் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதியின் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளருக்கும், அதேபோல் மாநிலம் முழுவதும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மூலம் மண்டல அதிகாரிகள், ஆளுங்கட்சி பகுதி செயலாளர்கள் வரை எவ்வளவு பணம் மாமூல் கொடுக்கப்பட்ட பட்டியல் சிக்கியுள்ளது.

இந்த பட்டியலில் அதிகளவில் சென்னை மற்றும் திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதுமே ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வெளிநாட்டு மதுபாட்டிலுடன் மாமூல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வரும் நேரத்தில் இந்த பட்டியல் வெளியானால் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கசியாமல் பார்த்து கொண்டதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கொரோனா கால நஷ்டத்தை ஈடுகட்ட மாமூல்

எலைட் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாமூல் பட்டியலை வைத்து போலீசார் டாஸ்மாக் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், “கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக பார்கள் அனைத்து ஆளுங்கட்சி நிர்வாகிகள் தான் நடத்தி வருகின்றனர். பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கட்டாயம் மாமூல் தர வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் மாமூல் பணத்தை ஈடுகட்டும் வகையில் எலைட் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. அதேபோல், மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள்நாட்டு மதுவகை பாட்டில் ஒன்றிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகமாக விற்பனை செய்ய டாஸ்மாக் விற்பனை ஊழியர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

* குட்காவை போன்று டாஸ்மாக் டைரி

குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது ரகசிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், குட்கா தடையின்றி விற்பனை செய்ய ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தை மாதவராவ் எழுதி வைத்திருந்தார். அதைபோன்றே எலைட் கடைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையிலும் யார் யாருக்கு எவ்வளவு பணம் மாமூல் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் சிக்கியுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: