நேர்காணலில் ஆளுங்கட்சி ஆதிக்கம்: தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரூ.6 லட்சம் பேரம்.!!!

சென்னை: தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரூ.6 லட்சம் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்  சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள  விற்பனையாளர், விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

நியாயவிலை கடைகளில் வேலை என்றவுடன் பலரும் பல லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு இந்த வேலையை பிடிக்க போட்டா போட்டியிட்டு பணத்தை கொடுக்க தயாராக உள்ளனர். முதலில் இது அரசு வேலையே இல்லை. இந்த  வேலைக்கு தேர்ந்தெடுப்பது மட்டும்தான் அரசாங்க அதிகாரிகள். இவர்களுக்கு சம்பளமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். சில வருடங்கள் பணியாற்றிய பிறகு அதிகப்பட்சமாக ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 30 ஆண்டு  பணி முடித்தவர்களுக்கு தற்போதுதான் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது.

இதுபோன்ற உண்மைகள் தெரியாமல், இளைஞர்கள் நியாயவிலை கடைகளில் பணியில் சேர்வதற்கு தமிழகம் முழுவதும் அரசியல் மற்றும் ஒரு சில நபர்கள் மூலமாக பல லட்சம் ரூபாய் பேரம் நடப்பதாக நாங்கள் அறிகிறோம். இதனால் ஏழை  கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். எனவே ஆட்கள் தேர்வில் அரசியல் தலையீடு மற்றும் பணபேரமின்றி உண்மையான விண்ணப்பதாரர்களை கண்டறிந்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும்  விண்ணப்பதாரர்களை நேர்மையான முறையில் நியமனம் செய்வதை மாநில பதிவாளர் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நியாய விலை கடை பணியாளர்கள் தேர்வுக்கு கூட்டுறவு துறை மூலம் நேர்காணல் நடத்தினாலும், ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய புள்ளிகளுக்கு ரூ.5 லட்சம்  முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: