மதுரவாயல் மேம்பாலத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரியை மீட்கும் பணியில் தீவிபத்து: 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அகற்றம்

சென்னை: மதுரவாயல் மேம்பாலத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரியை மீட்கும்போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை நோக்கி  ராட்சத மின்மாற்றி ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி  ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே 8 மணி அளவில் வந்தபோது மேம்பாலத்தின் கீழ் மின்மாற்றியின் மேல்பாகம் உரசியதால் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் லாரி அப்படியே நின்றுவிட்டது.  

சாலையின் நடுவே லாரி நின்று விட்டதால் கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் வாகனங்கள், லாரியின் இரு பக்கங்களிலும் ஊர்ந்தபடி சென்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், போக்குவரத்து போலீசார்,  நெடுஞ்சாலைத்துறையினர், லாரி ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கன்டெய்னர்  லாரியை அப்புறப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  இதற்கிடையே லாரியின் டயர்களிலிருந்து காற்றை வெளியேற்றி அகற்றும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பின்னர் அந்த மின்மாற்றியின் மேல்பாகத்தை வெல்டிங் மெஷினால் வெட்டி எடுத்துவிட்டு, உயரத்தை குறைத்த பிறகு லாரியை வெளியே எடுக்க முயன்றனர். அப்போது வெல்டிங் மெஷினிலிருந்து வெளியான தீப்பொறி மின்மாற்றியின் உள்ளே இருந்த ஆயில் மீது விழுந்து தீப்பிடிக்க தொடங்கியது.  இதனால் மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். சுமார் 5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருந்த லாரி மீட்கப்பட்டது.

விதிமீறலே காரணம்:

விபத்து குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த வாகனம் உரிய அனுமதி பெறாமலும், நெடுஞ்சாலைத்துறை விதிகளை கடைபிடிக்காமலும் சென்றுள்ளது.  இதற்காக சேதமடைந்த மேம்பாலத்தை சரி செய்து கொடுக்கவேண்டும். அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: