வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன்பாக புதிய வாக்காளர் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை:  சென்னையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு முன்பாக அந்த பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியில் 19,39,694 ஆண்கள், 19,99,995 பெண்கள், 1,015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,704 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நடந்த சிறப்பு முகாமில் சென்னையில் மட்டும் 1.25 லட்சம் பேர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். மொத்தம் 1.62 லட்சம் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பாக அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு அளிக்க வேண்டும்.  

அதை ஆய்வு செய்து அரசியல் கட்சிகள் அளிக்கும் ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை எடுத்து அதன் பிறகு பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பாக அது தொடர்பான விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories: