டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி: எழும்பூரில் பரபரப்பு

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யும் போக்கினையும் கைவிட வேண்டும் உட்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், மாநில தலைவர் சரவணன், செயல் தலைவர் பழனிபாரதி, பொதுச்செயலாளர் கோதண்டம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி, டாஸ்மாக் நிர்வாகம் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனர் மோகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாநில பொதுச்செயலாளர் கோதண்டம் கூறுகையில், எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே தான் தற்காலிகமாக எங்களது போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டிற்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிகை–்க எடுப்பது தொடர்பாக எங்கள் முடிவை அறிவிப்போம்’ என்றார்.

Related Stories: