கோவை மண்டல பதிவுத்துறையில் மேலும் மோசடியை ஆய்வு செய்ய கூடுதல் ஐஜி தலைமையில் 5 பேர் கொண்ட குழு: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு : ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கிறது

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் ரசீதை ரத்து செய்து பணத்தை கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய கூடுதல் ஐஜி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். கோவை மண்டலத்தில் மேலும் பலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவாகும் ஆவணங்களுக்கு இ-சலான் முறையில் பணம் செலுத்திய பிறகு ரசீது தரப்படுகிறது. இந்த ரசீதை வைத்து தான் ஆவணங்களுக்கு பதிவான கட்டணம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், அந்த ரசீதில் திருத்தம் செய்யும் நடைமுறை இருந்ததால், அதை பயன்படுத்தி கொண்டு, ரசீதை கேன்சல் செய்து, அதற்குரிய கட்டணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் பேரில், திருப்பூர் இணை 1ம் எண் சார்பதிவாளர் விஜயசாந்தி, தொட்டிபாளையம் இணை பதிவாளர் முத்துக்கண்ணன் மற்றும் நல்லூர் உட்பட 6 சார்பதிவாளர் அலுவலகங்களில் நூதனமுறையில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன்பேரில் முதற்கட்டமாக நடந்த விசாரணையில், 1.45 கோடி வரை கையாடல் செய்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிவு அலுவலரின் லாக்கினை தவறான பயன்படுத்தி முறைகேடு செய்ததாகவும், அலட்சியம் காட்டியதாக கூறியும், மாவட்ட பதிவாளர் விஜயசாந்தி, சார்பதிவாளர் முத்துக்கண்ணன் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதைதொடர்ந்து, இந்த முறைகேடு கோவை மண்டலத்திற்குட்பட்ட பதிவு மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் ரசீதை ரத்து செய்து பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

 எனவே, இது தொடர்பாக விசாரிக்க பதிவுத்துறை கூடுதல் ஐஜி நல்லசிவன் தலைமையில் திருச்சி டிஐஜி சேகர், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் (சீட்டு), திண்டிவனம் சார்பதிவாளர் (வழிகாட்டி) பிரவீனா, சேலம் மேற்கு சார்பதிவாளர் தமிழ்ச்செல்வன் (சீட்டு மற்றும் சங்கம்), அன்னூர் சார்பதிவாளர் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் கொண்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் இது போன்று முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் பதிவுத்துறை ஐஜிக்கு அறிக்கை சமர்பிக்கிறது. இந்த விசாரணை அறிக்கையின் பேரில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.  இந்த நிலையில் தற்போது ரசீதை ரத்து செய்யும் நடைமுறையில் தான் முறைகேடு நடந்ததால், முதற்கட்டமாக ரசீதை ரத்து செய்ய முடியாத வகையில் மென்பொருளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் ரசீதை ரத்து செய்ய விரும்பினால், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக ரத்து செய்யப்பட்ட ரசீதுகள் எவை என்பது தொடர்பாக தனியார் மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு பதிவுத்துறை தலைவர் சங்கர் எச்சரித்துள்ள தகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 கோடி முறைகேடு

கோவை மண்டலம்திருப்பூரில் சார்பதிவாளராக உள்ள அன்பழகனின் அலுவலகத்தில பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, கோவை காந்திபுரம் சார் பதிவாளராக உள்ள சிவராஜின் அலுவலகம், திருச்சியில் இணை 1 பதிவாளர் அஞ்சனகுமாரின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பதிவு அலுவலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பதிவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சுமார் ₹100 கோடிக்கு மேல் முறைகேடாக அரசு பணத்தை கையாடல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: