'ஆஷ்ரம் பள்ளி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்பதில் உண்மை இல்லை': லதா ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: ரூபாய் 1.99 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்பதில் உண்மை இல்லை என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவருகின்றன. இதை தொடர்ந்து, லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி காலி செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. லதா ரஜினிகாந்த் தனது ஆஷ்ரம் பள்ளிக் கட்டடத்துக்கான வாடகைத் தொகையில் பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால் வளாகத்தை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆஷ்ரம் பள்ளி தற்போது இயங்கும் கிண்டியில் 2021- 2022 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஆஷ்ரம் பள்ளிக்கான வாடகைத் தொகை நிலுவையில் உள்ளதாக வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பு காரணமாக ஆஷ்ரம் பள்ளியை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான கால அவகாசத்தை நீதிமன்றத்தில் கேட்டுள்ளோம். ஏப்ரல் வரை அவகாசம் தர வேண்டும் என்று தாங்கள் தான் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம். அதற்குத்தான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. 2021 - 2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய 2021 ஏப்ரல் 30ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: