மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி ஒதுக்கீடு ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி நியமனம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள சிக்கிம் ஐகோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.  மெரினா அழகுபடுத்துதல், புதிய மீன் அங்காடி அமைத்தல், நடைபாதை மற்றும் நடைமேம்பாலம் அமைத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி சென்னை மாநகராட்சி சார்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மெரினாவில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 6ம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும். அவற்றை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தகவல்கள் இருந்தது.

அப்போது, நடைபாதை வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், மெரினாவில் 1200க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் ஈட்டிய நிலையில் 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்க உள்ளது. மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதிகள், 900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும். 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வுபெற்ற சதீஷ்குமார் அக்னிகோத்ரியை இந்த நீதிமன்றம் நியமனம் செய்கிறது. வழக்கு விசாரணை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்  என்று உத்தரவிட்டனர்.

Related Stories: