முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பதவி: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: சிலைகள் மாயம், பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் 5 இணை ஆணையர்களை பணியிட  மாற்றம் செய்து அரசு செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் கோவை இணை ஆணையர், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஈரோடு இணை ஆணையர், ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் இணை  ஆணையர் ஜெயராமன் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர், இணை ஆணையர் கஜேந்திரன் திருவண்ணாமலை இணை ஆணையர், பாரதி திண்டுக்கல் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், மயிலாடு துறை மண்டல இணை ஆணையராக கஜேந்திரன் இருந்த போது தான் கும்பகோணம்  பந்தலூர் பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 6 சிலைகள் மாயமானதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மயிலாடு துறை மண்டல  இணை ஆணையர் கஜேந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் காரணமாக கடந்த 2017ல் கஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே போன்று, திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையராக இருந்த பாரதி கோயில் கடைகளில் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்ததாக கூறியும், பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் மீது சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கு மீண்டும் பணி வழங்கியிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: