டெங்கு வராமல் தடுக்க என்ன வழி?

சென்னை: டெங்குவுக்கு குறிப்பிடத்தக்க சிகிச்சை எதுவும் கிடையாது. தீவிரமான டெங்குவுக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், சரியான மருத்துவ சிகிச்சையை வழங்க முடியும். இதனால், டெங்குவால் ஏற்படும் இறப்பு  விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைக்கலாம். டெங்குவால் ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு குறையலாம். கடுமையான டெங்கு காய்ச்சல், சில நேரங்களில் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விடும். டெங்கு தடுப்பூசி ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போதைக்கு, டெங்கு காய்ச்சல்  உள்ள பகுதிகளில், கொசுக்களின் எண்ணிக்கையை குறைத்து, கொசுக்கடிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வதுதான், டெங்கு பரவலை  தடுப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது.அதிக காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் சோர்வு போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. தீவிரம் அடைவதற்கு முன்பே நோயை கண்டறிந்தால் குணப்படுத்திவிட முடியும். டெங்குவுக்கு தடுப்பூசி எதுவும்  கிடையாது. எனவே, டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சார்ந்துதான் மருத்துவ முறைகள் அமைந்துள்ளன.

சுகாதார ஊழியர்களுக்கு மிகப்பெரிய கவலை என்னவென்றால்,கொரோனாவுக்கான அறிகுறிகளும் டெங்கு அல்லது மலேரியா நோய் அறிகுறிகளும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன. களத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு இது மிகவும்  கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே, நோய் அறிகுறிகளை தவறாக கண்டறியும் ஆபத்துகள் இதில் உள்ளன. கொரோனா தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த மே மாதமே தொடங்கப்பட்டு விட்டன.  இந்த ஆண்டு, கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையிலேயே கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டது. தொற்று நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுத்தது. டெங்கு வைரஸ் பரப்பும் கொசுவால் கடிக்கப்பட்ட பிறகு, நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு 3  முதல் 15 நாட்கள் வரை ஆகலாம். வழக்கமாக 5 முதல் 8 நாட்களிலேயே அறிகுறி தெரிந்து விடும்.

டெங்குவால் பாதிக்கப்படாமல் தடுக்க, குளிர்சாதனங்கள் மற்றும் சிறிய கொள்கலன்களில் இருந்து வாரத்துக்கு ஒரு முறையாவது நீரை அகற்ற வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்ப பகல் நேரங்களில் கொசு ஸ்பிரே அடிக்கலாம். கொசுக்களின்  கடியைத் தடுக்க, பகல் நேரத்தில் கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கை மற்றும் அரைக்கால் சட்டை அணிந்து விளையாட அனுமதிக்க வேண்டாம். தூங்கும்போது கொசு வலைகள் அல்லது  கொசு ஸ்பிரேக்களை பயன்படுத்த வேண்டும்.

Related Stories: