சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 10.40 கோடி சிக்கியது

சென்னை: சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1.37 கோடி  ரொக்கம், 3.81 கிலோ தங்கம், வைரம், 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என 10.40 கோடிக்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வருவாய் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், பத்திரப் பதிவு துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள்,  தொழிலாளர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தமிழகம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டும், வழக்கு பதிவு செய்தும் பல கோடி ரொக்கம் மற்றும் 100 கோடிக்கும் மேல்  ஆவணம் மற்றும் நகைகளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக உள்ள பாண்டியன் தடையில்லா சான்று வழங்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு  தொடர் புகார்கள் வந்தன.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கி வரும் அலுவலகம், கண்காணிப்பாளர் பாண்டியன் வசித்து வரும் சாலிகிராமம் திலகர் ெதருவில் உள்ள வீட்டில் ஒரே  நேரத்தில் சோதனை நடத்தினர். இதில், அலுவலகத்தில் கணக்கில் வராத 88 ஆயிரத்து 500 பணம் மற்றும் 38 லட்சத்து 66 ஆயிரத்து 220 ரூபாய் கணக்கில் உள்ளதற்கான வங்கி கணக்கு புத்தகம் கைப்பற்றப்பட்டது. அதேபோல், கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடந்த சோதனையில் போலீசாரே வியக்கும் வகையில் பீரோ மற்றும் ரகசிய அறையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக 1.37 கோடி ரொக்கம், 1.22 கோடி மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51  லட்சம் மதிப்புள்ள 3.343 கிலோ வெள்ளி, 5.40 லட்சம் மதிப்புள்ள 10.52 கேரட் வைர நகைகள், 18 இடங்களில் வங்கப்பட்ட 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக வைத்திருந்த 37 லட்சம், ஒரு  சொகுசு கார், 2 பைக்குகள் என மொத்தம் 10 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கான ெசாத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கண்காணிப்பாளர் பாண்டியனிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் அவர் பணி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று வழங்க லஞ்சமாக வாங்கப்பட்டது என  தெரியவந்தது.

இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் முறைகேடாக பல தொழில் நிறுவனங்களுக்கும் பல லட்சம் லஞ்சம் வாங்கி கொண்டு சுற்று சூழல் தடையில்லா சான்று வழங்கியதும் விசாரணையில் ெதரியவந்துள்ளது. இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்று சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் பாண்டியன் கைது செய்யப்படுவார் என்ற லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைகளுடன் 10 நாள் ஜாலி டூர்

சென்னை பனகல் மாளிகையில் தரைதளத்தில்தான் பாண்டியன் அலுவலகம் உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பாண்டியனின் பெண்ணிற்கு திருமணம் நடந்தது. ஓட்டல் வைத்துள்ள உரிமையாளருக்கு சொந்தமான அனைத்து  கல்லூரிகள், மதுபான தொழிற்சாலை, குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் கிளியரன்சை பாண்டியன் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் பாண்டியனின் மகளின் திருமண செலவை ஓட்டல் உரிமையாளரே ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.  மேலும், லஞ்ச ஒழிப்பு இயக்குநரின் மனைவி சுற்றுசூழல் இயக்ககத்தில் இயக்குநராக வேலை பார்த்தபோது, அவரை செயல்படவிடாமல் தடுத்து பணம் வராத கோப்புகளில் கையெழுத்து போடவிடாமல் தடுத்துள்ளார். மேலும் சில வனத்துறை  அதிகாரிகளுடன் சேர்ந்து இவர் நடத்திய முறைகேடுகளை காண சகிக்காமலும் அவமானத்தாலும் வேறு இடத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்று விட்டார்.

கடந்த ஜனவரி இறுதியில் மூன்று துணை நடிகைகளுடன், தலைமைச்செயலகத்தில்  உள்ள சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் ஏ.ஜி.அலுவலர்களுடன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பத்து நாள் அளித்த விருந்து பற்றி இவர் பெருமையாக அனைவரிடம் தெரிவித்ததை இன்றளவும் சுற்றுசூழல் அலுவலகத்தில்  எல்லோரும் பேசி வருகிறார்கள். மேலும் சில வனத்துறை உயர் அலுவலர்கள் சோதனை பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

10.40 கோடி சொத்து விபரங்கள்

வீட்டில் ரொக்கப்பணம்    1.37 கோடி

அலுவலகத்தில் ரொக்கப்பணம்    88.500

3.081 கிலோ தங்க நகைகள்    1.22 கோடி

3.343 கிலோ வெள்ளி பொருட்கள்    1.51 லட்சம்

10.52 கேரட் வைர நகைகள்    5.40 லட்சம்

18 சொத்து பத்திரங்கள்    7 கோடி

வங்கியில் கையிருப்பு    38,66,220

வங்கியில் டெபாசிட்    37லட்சம் ரொக்கம்

சொகுசு கார் ஒன்று, விலை உயர்ந்த 2 பைக்குகள்

Related Stories: