நாடு முழுவதும் 60 இடங்களில் நடந்த சோதனையில் செட்டிநாடு குழுமம் 700 கோடி வரி ஏய்ப்பு: வெளிநாடுகளில் 110 கோடி பணம் முதலீடு: கணக்கில் வராத 23 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான சென்னை, ஐதராபாத், மும்பை உட்பட நாடு முழுவதும் 60 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 700 கோடியளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கணக்கில் வராத ₹23 கோடி ரொக்கம், 110 கோடி வெளிநாட்டு முதலீடுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிரபலமான தொழிற் குழுமங்களில் செட்டிநாடு குழுமமும் ஒன்று. இந்த குழுமம் சென்னை, மும்பை, ஐதாராபாத், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் சிமெண்ட் உற்பத்தி , மின் உற்பத்தி , நிலக்கரி வெட்டியெடுத்தல், மருத்துவ  பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். குழுமத்தின் தலைவர் ராமசாமி செட்டியார் இறந்த பிறகு, அவரது மகன் அய்யப்பன் தற்போது தலைவராக செயல்பட்டு செட்டி நாடு குழுமத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு செட்டி நாடு குழுமம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பல கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில் செட்டிநாடு குழுமம் மீண்டும்  வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து செட்டிநாடு குழுமத்திற்கு செந்தமான சென்னை, திருச்சி, கோவை, ஆந்திரா, கர்நாடகா, மும்பை என 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை  அதிகாரிகள் 200 பேர் கொண்ட குழு ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நான்கு நாட்கள் நீடித்த இந்த சோதனையில் செட்டி நாடு குழுமம் ரகசியமாக பராமரித்து வந்த லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ைகப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கணக்காய்வு செய்தனர். அந்த கணக்காய்வில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக 23 கோடி ரொக்க பணம் மற்றும்  கருப்பு பணம் தடை சட்டத்திற்கு எதிராக 110 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆவணங்கள் சிக்கின.

அதேபோல, செட்டி நாடு குழுமங்களில் உள்ள நிறுவனங்கள் மூலம் ெதாடங்கப்பட்டதாக போலி நிறுவனங்கள் பெயரில் ₹435 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், மருத்துவ பல்கலைக்கழகங்களில் நன்கொடையாக பல  கோடி வசூலிக்கப்பட்டதற்கான ஆவணங்கள், செட்டி நாடு குழும நிறுவனங்களுக்குள்ளேயே 280 கோடி சட்டத்திற்கு விரோதமாக முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் என 700 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு செட்டிநாடு குழுமம் வரி  ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கியது என்ன?

* கட்டுக்கட்டாக 23 கோடி ரொக்க பணம்.

* போலி நிறுவனங்கள் பெயரில் 435 கோடி பணம் பரிமாற்றம்

* மருத்துவ பல்கலைக்கழகங்களில் நன்கொடையாக பல கோடி வசூல்

* செட்டி நாடு குழும நிறுவனங்களுக்குள்ளேயே 280 கோடி சட்டத்திற்கு விரோதமாக முதலீடு.

Related Stories: