கொரோனா பாதிப்பு எதிரொலி..!! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படாது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படும்.

ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால்ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படுமா என்ற பேச்சும் பரவலாக அடிபட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மக்களவை தலைமைச் செயலகம் குளிர்கால கூட்டத்தொடரரை நடத்த தயாராக உள்ளது. ஆனால் இதுகுறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் நடந்தால் அதில் விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என்ற அறிவிப்பு எதிர்க் கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் போதுதான் அடுத்ததாக நாடாளுமன்றம் கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories: