புழல் ஏரியில் குளித்தபோது விபரீதம் மாணவர்கள் 3 பேர் சேற்றில் சிக்கி பலி

சென்னை: புழல் ஏரியில் குளித்த 3 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாகினர். அம்பத்தூர் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம், சக்தி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவர், முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார். அதே பகுதி, பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (17). சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். வில்லிவாக்கம், திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிலீப்குமார் (19), நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் மூவரும் ஓட்டப்பந்தயம் பயிற்சி பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரும், நண்பர்கள் பிரகாஷ், ராஜூ, சைமன், தாமரை, அபின் ஆகிய 5 பேருடன் அம்பத்தூர் அருகே புத்தகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். பின்னர், அவர்கள் பயிற்சி முடிந்து மதியம் 1 மணி அளவில் அம்பத்தூர் அருகே சூரப்பட்டு, மதுராமேட்டூர் பகுதியில் உள்ள புழல் ஏரி பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு 8 பேரும் ஏரியில் இறங்கி குளித்தனர். அதில் பிரகாஷ், ராஜூ, சைமன், தாமரை, அபின் ஆகியோர் கரை பகுதியில் குளித்தனர். மேலும், மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய 3 பேரும் ஏரியின் உள் பகுதிக்குச் சென்று குளித்துள்ளனர்.  

அப்போது, சேற்றில் சிக்கி 3 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த, நண்பர்கள் 5 பேரும் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள், 3 பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.  இதனையடுத்து, இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏரியில் இறங்கி 2 மணி நேரம் போராடி மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரின் சடலத்தை மீட்டனர். இது குறித்து அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: