வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னை சிறப்பு முகாம்களில் 1.25 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த நான்குநாள் சிறப்பு முகாம் மூலம் சென்னையில் மட்டும் 1.25 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். நீக்கம், முகவரி மாற்றம் என மொத்தம் 1.62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் தற்போது 6 கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39,47,704.

இதில் 19,39,694 பேர் ஆண்கள், 19,99,995 பேர் பெண்கள், 1,015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,704 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,73, 481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,06, 189 வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 21, 22 மற்றும் இந்த மாதம் 12, 13 மற்றும் ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

இந்த முகாம் மூலம் சென்னையில் மட்டும் 1.25 லட்சம் பேர் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். பெயர்கள் நீக்கம் செய்ய (படிவம் 7) 4,800 பேரும், பதிவுகளில் திருத்தம் செய்ய (படிவம் 8) 13,317 பேரும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (படிவம் 8A) 19,056 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். சென்னையில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,73,481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,06,189 வாக்காளர்களும் உள்ளனர்.

Related Stories: