உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே டிச.16ல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை

மதுரை: உசிலம்பட்டி-ஆண்டிபட்டி அகல ரயில்பாதையில் டிச.16ல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை-போடிநாயக்கனூர் ரயில் நிலையங்களுக்கிடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 கிலோமீட்டர் உள்ள இந்த ரயில்பாதையில் ஏற்கனவே 37 கிலோமீட்டர் மதுரை-உசிலம்பட்டி ரயில் பாதை பணி முடிவுற்று கடந்த ஜனவரி மாதம் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ. மனோகரன் ஆய்வு நடத்தினார். தற்போது உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே 21 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாதையில் உள்ள ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் பாறைகள் நடுவே ரயில் பாதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி-ஆண்டிபட்டி அகல ரயில்பாதையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை சார்ந்த தென் சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் வரும் 16ம் தேதி ஆய்வு செய்கிறார். முதலில் பாதுகாப்பு ஆணையர் ரயில்வே அதிகாரிகளுடன் மோட்டார் டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொள்கிறார். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை உசிலம்பட்டி-ஆண்டிபட்டி புதிய அகல ரயில்பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்கிறார்.

எனவே இந்த சமயத்தில் பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்லவோ, ரயில் பாதையை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம். இந்த சோதனையில் பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின், கட்டுமானத்துறை தலைமை செயல் அதிகாரி ரவிந்திரபாபு, முதன்மை பொறியாளர் இளம்பூரணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: