வாகன ஓட்டிகளை கவிழ்க்கும் உலகாணி-கொம்பாடி சாலை: சாலையோர களிமண்ணால் விபத்து அபாயம்

திருமங்கலம்: உலகாணியில் இருந்து கொம்பாடி செல்லும் சாலையின் இருபுறமும் கொட்டப்பட்டுள்ள களிமண்ணால், மழை காலங்களில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், உலகாணியில் இருந்து கொம்பாடி வழியாக மதுரைக்கு செல்ல சமீபத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் களிமண்ணை போட்டு பள்ள மேடுகளை மூடியுள்ளனர். குறுகலான இந்த சாலை வழியாக கள்ளிக்குடி சமத்துவபுரம், உலகாணி, கொம்பாடி பகுதி மக்கள் அதிகளவில் டூவிலரில் சென்று வருகின்றனர். இப்பகுதி குவாரிகளிலிருந்து தினசரி ஏராளமான லாரிகள் மதுரை சென்று வருகின்றன.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் களிமண் ஈரத்தில் ஊறியதால் உலகாணி-கொம்பாடி சாலை வழுக்கல் சாலையாக மாறியுள்ளது. இந்த சாலையில் செல்வோர் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் களிமண்ணால் வாகனங்கள் புதைத்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். லாரிகள் ஓரம் கட்டும்போது எதிர்பாராதவிதமாக களிமண் சகதியில் சிக்கி கொள்கின்றன. கடந்த நான்கு தினங்களில் மட்டும் சுமார் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி கவிழந்துள்ளன. இதனால், டூவிலரில் செல்வோர் கொம்பாடிக்கு செல்வதற்குள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து உலகாணி சத்யேந்திரன் கூறுகையில், ‘உலகாணியிலிருந்து கொம்பாடி சாலையில் சமத்துவபுரத்தை அடுத்த அய்யனார் கோயில் வரையில் சமீபத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் களிமண் கொட்டியதால் வாகனோட்டிகள் சாலையை விட்டு கீழே இறங்க முடியவில்லை. இந்த களிமண்ணை அகற்றிவிட்டு வேறு மண் போட்டு சாலையோரத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பல லட்சம் ரூபாயில் சாலை அமைத்தும் பயன் இல்லை. இதை காரணம் காட்டி மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து கொம்பாடி, உலகாணி வழியாக சின்ன உலகாணிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: