மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கையில் மருத்துவ மையம்

சிவகங்கை: சிவகங்கை முந்தைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட உள்ளது. சிவகங்கை நகர்ப்பகுதியிலுள்ள முந்தைய அரசு தலைமை மருத்துவமனை வளாகக் கட்டிடத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று தனியார் பவுன்டேசன் சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மையத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் மூலம் வாலாஜாபேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சிவகங்கை முந்தைய அரசு தலைமை மருத்துவமனையில் இம்மாத இறுதிக்குள் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு துவங்க உள்ளனர். சிகிச்சை வழங்குவதற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மாவட்டத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரிபவர்களை கண்டறிந்து இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் தேவையான சிகிச்சை வழங்குவதுடன் அவர்கள் முழுமையாக குணமடைந்து தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வரை பராமரிக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்தார். உடன் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், துணை இயக்குநர் யசோதாமணி மற்றும் தனியார் பவுண்டேசன் நிர்வாகிகள், மருத்துவர்கள் இருந்தனர்.

Related Stories: